காகம் உணர்த்தும் சகுனம்
காகம் இந்தியாவில் அதிக அளவில் காணப்படும் பறவை இனம் ஆகும். இந்து சமயத்தில் காகம் அதிக அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. எம லோகத்தின் வாயிலில் காகம் வீற்று இருப்பதாக ஒரு ஐதீகம் உண்டு.காகத்தை நம் முன்னோர்களின் அம்சமாகவே கருதுகின்றனர். அதனால் தான் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் போதும், அமாவாசை அன்றும் காகத்திற்கு உணவளித்து பின் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
- காகம் சனி பகவானுடைய வாகனமாகும். நீங்கள் செய்யும் புண்ணிய கர்மத்திற்கு ஏற்ப காகத்தின் மூலம் சில அறிகுறிகளை இறைவன் உங்களுக்கு உணர்த்துவார்.
- காகம் கரைவது முதல் எச்சம் இடுவது வரை அனைத்துமே சகுன பலன்களை சொல்லும் என்று நம்பப்பட்டு வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், சகுன சாஸ்திரத்தில் பறவைகளில் காகத்திற்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகிறது.
- ஒருவருடைய பயணத்தின் போது அவரது வாகனம், குடை, காலணி அல்லது அவர் உடல், நிழல் ஆகியவற்றை காகம் தன் சிறகால் தீண்டினால், பயணத்தின் போது அவருக்கு அதிக தீமையை முன் கூட்டியே அறிவுறுத்துவதாக அர்த்தமாகும்.
- சில சமயங்களில் கண்டம் கூட ஏற்படும் என்பதை ‘காக்கைபாடினியார்’ எனும் சங்க காலப் புலவர் எழுதிய “சகுன சாஸ்திரத்தின்” மூலமாக அறிய முடிகிறது.
- நீங்கள் வெளியில் எங்காவது செல்கிறீர்கள் என்றால் உங்களுக்கு நேரெதிரே நீங்கள் செல்லும் திசையை நோக்கி காகம் கரைந்து கொண்டே வந்தால் அந்தப் பயணத்தை தவிர்ப்பது நல்லது.
- பயணத்தின் போது காகம் வலமிருந்து இடம் போவது தன லாபத்தையும், இடமிருந்து வலம் போவது தன நஷ்டத்தையும் தருமாம்.
- பயணிக்கும் அன்பரை நோக்கிக் காகம் கரைந்து கொண்டே பறந்து வந்தால், பயணத்தைத் தவிர்த்து விட வேண்டும் என்கிறது சகுன சாஸ்திரம்.
- காகம் தன் குஞ்சுக்கு உணவு கொடுப்பது போல பார்க்க நேர்ந்தால் அது சுப சகுனம் ஆகவே கருதப்படுகிறது. நல்ல விஷயங்கள் உங்கள் வீட்டில் நடைபெறும் என்பதை குறிப்பதாகும்.
